ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மட்டிபாடு காவல் நிலையத்தில் வர்மா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய நிலையில், அதனை காவல்துறையிடமே பெற ஆலோசனை வழங்கியதுடன் காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் இருந்தால் முன்ஜாமீன் கோரி மனு அளிக்க அறிவுறுத்தியது.

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவர் அங்கு இல்லாததை அடுத்து அவரை தேடி வருகின்றனர்.

ராம் கோபால் வர்மாவை தேட மூன்று தனிப்படைகள் அமைத்துள்ள ஆந்திர போலீசார் அதில் ஒரு தனிப்படையை தமிழகம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் அப்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து அவரது மகன் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியதையும் அடிப்படையாக வைத்து, வாயுஹம் என்ற திரைப்படம் வெளியானது.

ஆந்திர சட்டசபை தேர்தலை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் விளம்பரத்தின் போது சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை அவர் விமர்சித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது புதிதாக அவர் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இயக்குனர் ராம் கோபால் வர்மாவை ஆந்திர போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.