டெல்லி

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு டெல்லியில் நடந்த அனைத்துக்  கட்சி கூட்டம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

நாளை முதல் டிசம்பர் 20 ஆம் தேதிவரை நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி இன்றுஅனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் பிற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம்

“திமுக சார்பில் இரு அவைகளில் எழுப்ப உள்ள விவகாரங்கள் குறித்து முன்வைத்தோம். 10 முதல் 12 பிரச்னைகள் வரை திமுக சார்பாக எடுத்து வைத்துள்ளோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிக்க கோரியுள்ளோம். கணக்கெடுப்பு எடுத்தால்தான் இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்த முடியும்.

நீட் தேர்வு மசோதா நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு என்பது மோசமடைந்துள்ளது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இரண்டு அவைகளிலும் கேள்வி எழுப்பப்படும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, பள்ளிக் கல்விக்கான சமக்கிரசிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து அவைகளில் பேச உள்ளோம்”

என்று தெரிவித்துள்ளார்.