நேர்மையான சினிமா விமர்சனம்..
முக்கியமாக மூன்று விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும்..
முதலில் படத்தின் கதையை நேர்த்தியாக விவரிப்பார்கள். ஆனால் முடிவை மட்டும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
அந்த காலத்தில் நாலணா (25 காசுகள்), எட்டணாவுக்கு அச்சடிக்கப்பட்ட பாட்டு புத்தகத்திலேயே கதைச்சுருக்கம் என்று வரும்போது, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு “மிகுதியை வெண் திரையில் காண்க” என்று கிளைமாக்ஸ்சை சொல்லாமல் அறம் காப்பார்கள்.
விமர்சனத்தில் இரண்டாவது பார்ட் என்பது, படத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை குறிப்பிட்டு பாராட்டுவார்கள்.. சில சீன்களில் நடிகர் நடிகையரின் வியக்கத்தக்க நடிப்பை விவரித்து சிலாகிப்பார்கள்.
இதன்பிறகு படத்தில் உள்ள குறைகளையும் கோட்டை விட்ட விஷயங்களையும் சுட்டிக்காட்டி இதை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் எப்படி கவனிக்க தவறினார்கள் என்று நாகரீகமாக இடித்துரைப்பார்கள்.
தொலைக்காட்சிகள் வராத காலத்தில் நேர்மையான பத்திரிகைகள் இப்படித்தான் விமர்சனங்களை எழுதினார்கள்.
எல்லோருமே இப்படித்தான் எழுதினார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அந்தக் காலத்திலும் வன்மவாதிகள் உண்டு. ஆனால் அளவில் மிக மிக குறைவாக இருந்தார்கள்.
எதிராளியிடம் வாங்கிய காசுக்காக ஒரு புதுப்படத்தை முழுமையாக திட்டி தீர்த்து கேவலப்படுத்தியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட பத்திரிகைகளும் இருந்தன.
எம்ஜிஆரின் நீதிக்குப் பின் பாசம் படத்தை ‘பாதிக்குப்பின் படு மோசம்’ என்று அப்போது ஒரு முன்னணி நாளிதழ் எழுதி வன்மத்தை தீர்த்துக் கொண்டது.
சில பத்திரிகை ஆசிரியர்களின் கீழ்த்தரமான போக்கை, 1966-ல் வெளியான எம்ஜிஆரின் சந்திரோதயம் படம் தோலுரித்துக் காட்டியது.
தினக்கவர்ச்சி என்ற பத்திரிகையின் ஆசிரியராக வரும் துரியோதனன் (எம். ஆர்.ராதா) ஒரு தயாரிப்பாளரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, ” உன் படத்துக்கு எதிராக அவன் படம் வருகிறதா? உன்னை தூக்கி அவனை தாக்குகிறேன்” என்று சொல்வார்.
முழு படத்திற்கு மட்டுமல்ல தனிமனித தாக்குதல்களும் சினிமா விமர்சனங்களில் இல்லாமல் இல்லை.
இளையராஜா முதன் முதலில் அறிமுகமான அன்னக்கிளி (1976) படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். பட்டி தொட்டி எங்கும் அந்த கிராமிய பாடல்கள் அதகளம் செய்தன.
ஆனால் அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதிய ஆனந்த விகடன், இளையராஜா என்ற இசை அமைப்பாளர் அந்தப் படத்தில் இருந்தார் என்பதைக்கூட சொல்லவில்லை.
அவ்வளவு ஏன் இளையராஜா பாப்புலர் ஆகி 400 வது படம் என கமல் நடித்த நாயகன்(1987) படத்திற்கு இசையமைக்கிறார். அதற்கு ஆனந்த விகடன் இப்படி எழுதுகிறது,
“இளையராஜாவின் 400-வது படமாம்! படத்தின் செட், டேக்கிங், கலர், ரிச்னெஸ் – இவற்றுக்கு நடுவே இளையராஜாவே இருக்கும் இடம் தெரியாமல் அமுங்கிப் போய்விடுகிறார்… பாவம்”
நாயகன் படத்தை பொருத்தவரை தெறி ஹிட்டான பாடல்களை விடுங்கள், இளையராஜாவின் பின்னணி இசை இல்லாமல் அந்த படத்தை யோசித்துப் பாருங்கள். ஆனந்த விகடன் வன்மம் புரியும்.
இன்றைக்கு 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னேறி இருக்கும் நடிகர் விஜய், 1990களில் கதாநாயகனாக முதன் முதலில் அறிமுகமான படத்திற்கு “இதெல்லாம் ஒரு மூஞ்சா?” என்று எழுதியது குமுதம் வார இதழ்.
இந்த வன்ம புத்திதான் இப்போது சினிமா விமர்சனங்கள் அனைத்திலும் தலைவிரித்தாடுகிறது.
Youtube வாலாக்கள் வந்த பிறகு பெரும்பாலும் படங்களை பற்றிய விமர்சனம் என்றால் நெகட்டிவிட்டி தகவல்கள் தான் அதிகம்.
பார்வையாளர்கள் எக்கச்சக்கமாக கூடி வருமானம் கிடைப்பதால் எவ்வளவு நெகட்டிவிட்டியை அதிகரிக்க முடியுமோ அவ்வளவு அதிகரிக்கிறார்கள் யூடியூப் வாலாக்கள்.
“நார் நாராய் கிழித்து தொங்க போட்டு விட்டான்யா” என்று சிலாகித்துக் கொண்டு இப்படியான எதிர்மறை கருத்துக்களை தான் மக்களும் விழுந்தடித்துக் கொண்டு அதிகமாக விரும்பி பார்க்கிறார்கள், எழுத்துக்கள் வடிவில் வந்தால் படிக்கிறார்கள்..
ஆக நேர்மையான விமர்சனங்கள் காணாமல் போவதற்கான காரணம், ஜாலிக்காக என்று சொல்லி சமூக வலைத்தளங்களுக்கு வரும் மக்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இதையெல்லாம் ஊக்குவிக்கக் கூடாது என்று புறந்தள்ளுகிற போக்கு வருகிற வரை சினிமா விமர்சனங்களில் திட்டமிட்டு பரப்பப்படுகிற நெகட்டிவிட்டி குறையவே குறையாது.
– ஏழுமலை வெங்கடேசன்.