இம்பால்
மணிப்பூரில் வன்முறை தொடர்வதால் பாஜகவுக்கு அளித்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனமோதல் மற்றும் வன்முறை தொடர்கிறது. இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையான மெய்தி இன மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளைச் சேர்ந்த குகி பழங்குடியின மக்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு சுமார் 60,000 பேர் ஊரை விட்டு வெளியேறி உள்ளனர்.
காவல்துறை மற்றும் மத்திய படைகளின் நடவடிக்கைகளால் சற்று தணிந்திருந்த வன்முறை, சமீபத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
மீண்டும் ஜிரிபம் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டதையடுத்து நேற்று இரவு வன்முறை வெடித்தது. மாநில முதல்வர் பிரேன் சிங்கின் வீடு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை வன்முறையாளர்கள் தாக்கினர். ஒரு சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின.
தேசிய மக்கள் கட்சி \பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
”மணிப்பூரில் கடந்த சில நாட்களாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
பிரேன் சிங் தலைமையிலான அரசு இந்த நெருக்கடியைத் தீர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் தவறிவிட்டது.
எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள தேசிய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே பா.ஜ.க.வுக்கு சட்டசபையில் மெஜாரிட்டி இருப்பதால் (32) ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை எனக் கூறப்படுகிறது.