சென்னை
எந்திரக் கோளாறு காரணமாக சென்னை விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானம் சென்னை மீனம்பாக்கம் உள்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் புறப்பட்டு ஓடுபாதைக்கு செல்லும்போது விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இனி விமானம் பறப்பது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி ஓடுபாதையிலேயே அவசரமாக விமானத்தை நிறுத்தினார்.
இதுபற்றி உட்னே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து வழியில் நிறுத்தப்பட்ட விமானம் மீண்டும் நடைமேடைக்கு இழுவை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானப் பயணிகள் 164 பேரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமானம் பழுதுபார்க்கப்பட்டு 7 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.