அரியலூர்: 2026-ல் கூட்டணி ஆட்சியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து எஸ்கேப்பானர் விசிக தலைவர் திருமாவளவன். போகிறபோக்கில் இது பொருத்தமில்லாத கேள்வி என கூறினார்.
தமிழ்நாட்டில் மாநிலஅரசே மதுக்கடைகளை நடத்தி வரும் நிலையில், கூட்டணி கட்சியான விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுக உள்பட பல கட்சிகளுக்கும் விசிக தலைவர் திருமா அழைப்பு விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே விசிக தலைவர்கள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேசி வந்த நிலையில், திருமாவளவனின் திடீர் அழைப்பு அரசியல் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகும் என அரசியல் விமர்சகங்கள் கூறினர். இது ஊடகங்களில் விவாதப்பொருளாகவும் மாறியது.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் கட்சியான தவெகவின் மாநாட்டில் பேசிய விஜயும், கூட்டணி கட்சிகளக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என கூறியது, பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு விசிக கட்சியினர் உள்பட பல கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் கூட்டணி ஆட்சி என்ற விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்து உள்ளன.
இந்த நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் , விசிக எம்பி திருமாவளவன் கலந்துகொண்டார். நிகழ்வு முடிந்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது , “2024 – 2025ஆம் ஆண்டுக்கான திட்ட வளர்ச்சி குறித்த முதல் கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் , அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஏற்கனவே முடிவுற்ற பணிகள், இனி முடிக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அடுத்த ஆலோசனை கூட்ட அமர்வில் நிலுவையில் உள்ள திட்டங்கள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என திருமாவளவன் தெரிய்வித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியளார்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். அத்துடன், 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பறிகு, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதா.? அப்படி அமையும் பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கூற்று குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வியை கேட்டவுடன், கையெடுத்து கும்பிட்டு, “இது இப்போது பொருத்தமில்லாத கேள்வி, வாய்ப்புக்கு நன்றி என தெரிவித்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பானார் விசிக தலைவர் திருமாவளவன்.