சென்னை: நவம்பர் 8ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்  நடைபெற உள்ளது. இதையொட்டி, அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில்,    பள்ளிக் கல்வி இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்காக நான் முதல்வர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் உயர்கல்வி பெற்று வருகின்றனர்.  பள்ளிக் கல்வித்துறை சார்பில், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், கலைத் திருவிழா, விழுதுகள், நம் பள்ளி நம் பெருமை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், முதலமைச்சரின் திறனறிவுத் தேர்வு, அனைவருக்கும் ஐஐடிஎம், மணற்கேணி, வெளிநாட்டு கல்விச் சுற்றுலா என எண்ணிலடங்கா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 55-க்கும் மேற்பட்ட மாணவர் நலத் திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் மேலும் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்,   பள்ளிக் கல்வித்துறை சார்பில் இயக்ககங்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,  இனி மாவட்டம்தோறும் துறை வாரியாக ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளேன் என்று அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அந்த வகையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 8ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தை  முன்னிட்டு துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வி இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.