சென்னை: Reddit மொபைல் ஆப் மூலம் போதைபொருள் விற்பனை செய்து வந்த 5 பொறியியல் மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராள மான போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரும் சுமார் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் போதை பொருள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் அவ்வப்போது காவல்துறையினர் போதை பொருள் கடத்தியதாக சிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த வாரம் சென்னை கொடுங்கையூர் பகுதியில் மெடிலேப் என்ற பெயரில் போதை பொருள் தயாரித்த பட்டதாரி இளைஞர்களை கைது செய்த நிலையில், தொடர்ந்து சில இடங்களில் போதை விற்பனை செய்துவந்த பலரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், ரெடிட் என்ற மொபைல் ஆப் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 20-21 வயது மதிக்கத்தக்க 5 பொறியியல் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து LSD ஸ்டாம்ப்கள், OG கஞ்சா மற்றும் MDMA போதை மாத்திரைகளை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், சமூக வலைதள செயலியான ரெடிட் (Reddit) மூலம் மாணவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை V-3 ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரி சாலை பகுதியில் ஜெ.ஜெ.நகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாணவர் கார்த்திகேயன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில், அவர் போதை பொருள் சப்ளை செய்ய சென்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து 17 LSD ஸ்டாம்ப்கள் மற்றும் 3 கிராம் ஒ.ஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த மாணவனிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் அரவிந்த் பாலாஜி, (20) வத்சல் (21), ஆருணி(20), திரிசண் சம்பத் (20), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 94 LSD ஸ்டாம்ப்கள். 4 8 MDMA மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்கள் 5 பேரையும் அரசு பொது மருத்துவமனையில் உள்ள மத்திய உயிர் வேதியியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில் கார்த்திக்கேயன், அரவிந்த் பாலாஜி, வத்சல், ஆருணி மற்றும் திரிசண் சம்பத் ஆகியோர் போதை பொருட்கள் பயன்படுத்தி இருந்தது அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
சென்னையில் கொடிகட்டி பறக்கும் போதை பொருள் வியாபாரம்! டோர் டெலிவரி செய்த 4 பேர் கொண்ட கும்பல் கைது..