மைசூரு
கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலவழக்கு விசாரணைக்கு நவம்பர் 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.
தற்போது கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதன்படி முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தாலும், கர்நாடக உயர்நீதிமன்றம், விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது.
லோக் அயுக்தா காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முடா நிலமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக வரும் நவம்பர் 6 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா காவல்துறையினர் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.