டெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவில்லை என்றால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

அரியானா மாநிலத்தில் 90 சட்ட பேரவை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த அக்டோபர் மாதம் 5ந்தேதி நடைபெற்றது. இதில்,   48 தொகுதிகளில் வென்று, பா.ஜ  மீண்டும்  ஆட்சியை பிடித்தது.. இந்த தேர்தலில்  தோல்வியுற்ற காங்கிரஸ் கட்சி, பாஜக  முறைகேடு செய்தே வெற்றிபெற்றதாக குற்றம் சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தல் கமிஷனிடம் புகார்  அளிக்கப்பட்டது. ஆனால், . இந்த புகார்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என கூறி  தேர்தல் ஆணையம் புகாரை கிடப்பில் போட்டது.

இதுகுறித்து கூறிய அரியானா மாநில தேர்தல் அதிகாரி,   ‘ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளையும் காங்கிரஸ் குறை சொல்வதை ஏற்க முடியாது. இவ்வாறு புகார் கூறுவது, காங்கிரசுக்கு வழக்கமான ஒன்றே’ , காங்கிரஸ் கட்சியின் புகார் அடிப்படையற்றது “ஆதாரமற்றது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட, 9 மூத்த காங்., தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளனர். அதில்,  அரியானா தேர்தல் தொடர்பாக நாங்கள் கூறியுள்ள புகார்களுக்கு தேர்தல் கமிஷன் அளித்துள்ள பதிலை கவனமாக ஆராய்ந்தோம். எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை எனக் கூறி, தேர்தல் கமிஷன் தனக்கே நற்சான்றிதழ் அளித்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.

அதேசமயம், காங்கிரசுக்கு எதிராக தேர்தல் கமிஷன் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள், முன்வைத்த குற்றச்சாட்டுகள், இந்த கடிதத்தை எழுத வைத்துள்ளன. தேர்தல் கமிஷனுக்கு ஆலோசனை அளிப்பது அல்லது வழிநடத்துவது யார் எனத் தெரியவில்லை.

ஆனால், அரசியலமைப்பு சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை தேர்தல் கமிஷன் மறந்து விட்டது. நடுநிலைக்கான கடைசி நம்பிக்கையை சிதறடிப்பதே தேர்தல் கமிஷனின் லட்சியமாக தெரிகிறது; அந்த லட்சியத்தை அடைய ‘மகத்தான பணிகளை’ அது செய்து வருகிறது.

எங்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.