“இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் லேவில் தொடங்கப்பட்டது!” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவும் வகையில் வேற்று கிரக நிலைகளின் சவால்களை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ தனது முதல் அனலாக் விண்வெளி பயணத்தை இன்று செயல்படுத்தியுள்ளது.

இந்தியா பல விண்வெளிப் பயணங்களைத் தொடங்க திட்டமிட்டிருந்தாலும், எதிர்கால விண்வெளி வீரர்கள் வேற்று கிரக பயணங்களில் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள இந்த புதிய பணி உதவும்.

ஹப்-1 எனப்படும் பூமிக்கு அப்பாற்பட்ட ஒரு கிரக வாழ்விடத்தில் வாழ்க்கையை உருவகப்படுத்தும் அமைப்பு லடாக்கின் லே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹப்-1 ஹைட்ரோபோனிக்ஸ் பண்ணை, சமையலறை மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்ட கால விண்வெளி பயணங்களை இந்தியா திட்டமிட்டுள்ளதால், எதிர்கால விண்வெளி வீரர்கள் வேற்று கிரக பயணங்களில் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள புதிய பணி உதவும் என்று கூறப்படுகிறது.

செவ்வாய் மற்றும் சந்திரனின் நிலப்பரப்புகளை ஒத்திருக்கும் தனித்துவமான புவியியல் அம்சங்கள் காரணமாக இந்த ஆய்வுக்கு லடாக் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த முதல் அனலாக் விண்வெளிப் பயண ஆய்வு மனித விண்வெளிப் பயண மையம் (Human Spaceflight Centre), ISRO, AAKA ஸ்பேஸ் ஸ்டுடியோ, லடாக் பல்கலைக்கழகம், ஐஐடி பாம்பே மற்றும் லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.