சென்னை: தை பிறந்தவுடன்  கட்சிக்கு வழி பிறக்கும்  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை  தெரிவித்து உள்ளார்.  மேலும் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்கும்கிராம தரிசனம்  நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்றார்.

நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய், அதிகார பகிர்வு குறித்து வெளிப்படையாக அறிவித்தார். இது மற்ற கட்சிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலும் பலர், அதிகாரப்பகிர்வு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். தமிழ்நாட்டில், கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சியான திமுக ஆட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில்,  ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் புறக்கணிக்கப்படுவது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் கடந்த வாரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் சரவணன் ஸ்டாலினுக்கு கடிதம்  எழுதியிருந்தார். அவரது கடிதத்தில்,  கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்றும் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை வயநாடு மக்களவை இடைத்தேர்தலில்  போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் சார்பில் , அங்கு வசிக்கும் தமிழர்களின் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளோம்.  இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காங்கிரசின் கட்டமைப்பை வலுப்படுத்த வருகிற 5 ஆம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் தொடங்குகிறது. இந்த பணிகள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிவையும்.

அதைத் தொடர்ந்து கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமங்கள் நோக்கி செல்கிறோம். எங்கள் தலைவர் கிராம மக்களுடன் தங்கி பணியாற்றுவார்கள். கட்சி வலிமையாக இருந்தால், கிராமங்களில் உயிரோட்டமாக இருந்தால் தான் பிற கட்சிகள் எங்களை தேடி வரும்

விஜயின் பேச்சு குறித்து செல்வப்பெருந்தகை கூறுகையில், விஜயின் பேச்சு இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்தியா கூட்டணிக்கு அவரது பேச்சு கூடுதல் வலுசேர்த்துள்ளது. சலசலப்பு ஏற்படும் என நினைத்தவர்களுக்கு தான் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. அதனால் தான் கடந்த தேர்தலில் 40க்கு 40 என அனைத்து தொகுதிகளையும் வென்றுள்ளோம்.

தற்போது, ஆட்சியில் பங்கு, அதிகாரப்பகிர்வு எழுந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவை எடுக்க வேண்டியது அகில இந்திய தலைமை தான். இப்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம்.

2006 – 2011-இல் திமுகவுக்கு மெஜாரிட்டி இடங்கள் கிடைக்கவில்லை. அப்போது காங்கிரஸ் ஆதரவளித்து தான் ஆட்சி அமைக்கும் நிலை இருந்தது. அப்போது தலைமையில் இருந்த சோனியா காந்தி, பெருந்தன்மையுடன் அமைச்சரவை இடம் இல்லாமல் ஆட்சியமைக்க திமுகவுக்கு ஆதரவளித்தார். அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் அமைச்சரவை இடம் இன்றி ஆதரவளித்தது. இதுதான் காங்கிரஸின் பெருந்தன்மை.

எங்களை பொறுத்தவரை தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம். த.வெ.க தலைவர் விஜயின், அதிகார பகிர்வு பற்றி பேசியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு மிகவும் லாபகரமாக இருக்கும். தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் கட்சி உருவாக்க வேண்டும் என்பதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும்.

மேலும், ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் தான் விஜய் கட்சி தொடங்கியதாக ஒரு பேச்சு உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “இதை அவரிடம் தான் கேட்க வேண்டும். யார் சொல்லி நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள்?” என விஜய்யிடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்தியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை.

தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்வபெருந்தகையின்  பேட்டியின்போது, காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, அருள் பெத்தையா, பி.வி.தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.