தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது திமுகவின் உதயசூரியன் சின்னம் பதித்த டி-சர்ட் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி டி-சர்ட் அணிந்து வருவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய ஆடை விதிகள் தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி, வெளியிடப்பட்ட அரசாங்க ஆணைக்கு (G.O.) இணங்குமாறு உதயநிதிக்கு உத்தரவிடக் கோரி சென்னை சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் சத்ய குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களுக்குப் பொருந்தாது என்று அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்போது, அமைச்சர்கள் பின்பற்ற வேண்டிய ஆடை விதிகள் என ஏதேனும் இருக்கிறதா ? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.