சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து மைதானங்களை தனியாரிடம் குத்தகைக்கு விட தீர்மானம் நிறைவேற்றிய சென்னை மாநகராட்சிக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு விட நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம்  அக்டோபர் 30ந்தேதி மாமன்ற அரசில் நடைபெற்றது. அப்போது 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சென்னை மாநகராட்சியின் கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 120 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தீர்மானத்தின் அடிப்படையில், மைதானங்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடும் பட்சத்தில், அதில் 60 சதவீதம் லாபம் தனியாருக்கும், 40 சதவீத லாபம் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கும் கிடைக்கும்.

இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் பேசும் பொழுது, அதற்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மைதானங்கள் மாநகராட்சியிடம் இருப்பதால் சரியாக பராமரிக்க முடியவில்லை எனவும், அந்த மைதானங்களில் வேறு சில நடவடிக்கைகளும் நடைபெறுகிறது. எனவே, அதை தடுக்கும் விதமாக அந்த மைதானங்களுக்கு ஒரு கட்டணம் நிர்ணயித்தால் அது போன்ற செயல்கள் இருக்காது என தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு மாநகராட்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட், விசிக, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மைதானங்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டதால், விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் போய்விடும் என்பதை சுட்டிக்காட்ட, சென்னை மாநகராட்சி வளாகத்தில் கால் பந்தை எடுத்து வந்து விளையாடினர்.

ஏழை குழந்தைகள், கட்டணம் செலுத்தி விளையாட வேண்டும் என்றால், அவர்களுடைய விளையாட்டு முழுவதுமே பாதிக்கப்படும். மேலும், ரூ.7,500 வரை ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டிய சூழல் இருக்கும். அவர்களால் அதைச் செலுத்த முடியாது. குறிப்பாக, வடசென்னை பகுதி மக்கள் பயன்படுத்தும் விளையாட்டு மைதானங்களை தனியார் மயமாக்கப்பட்டால், அவர்களுடைய விளையாட்டு பாதிக்கப்பட்டு இளைஞர் சமுதாயம் வேறு வழியில் சீர்கெட வாய்ப்பு உள்ளது. வட சென்னை இளைஞர்கள்  . மைதானங்களில் காலை முதல் இரவு வரை இலவசமாக பயிற்சி பெற்று வருகிறார்கள். கட்டணங்கள் வசூலிப்பதால் அவர்கள் பெரிய பின்னடைவைச் சந்தித்து தவறான பாதைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என விமர்சிக்கப்பட்டது.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அதிமுக, பாமக என எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதுபோல விளையாட்டு வீரர்களின் மாநகராட்சியின் தீர்மானத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களின் எதிர்ப்புக்கு மாநகராட்சி பணிந்துள்ளது. இதைத் தொடர்ந்து,  விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு விட நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

கால்பந்து விளையாட 120 ரூபாயா? மைதானத்தை தனியாரிடம் தாரை வார்ப்பதா? பாமக தலைவர் கடும் எதிர்ப்பு…