டெல்லி

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் 19000 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு 79 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருவதுடன் காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய மற்றும் சேமித்து வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 77 வருவாய்த்துறை குழுக்கள் மற்றும் 300 காவல்துறை குழுக்கள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டதில் இதுவரை 19 ஆயிரத்து 5 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்