சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி,  சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகள் மூலம் 1,10,745  பேர் பயணம்  செய்துள்ளதாகவும்,   இன்னும் 69% இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகை வரும் 31ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து 4 நாட்கள் அரச விடுமுறை கிடைத்துள்ளது. எனவே சென்னை உள்பட நகர்ப்புறங்களில்  தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். இதன் காரணமாக, கூட்ட  நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

அதன்படி,  சென்னையில் இருந்து அக்டோபர் 28ந்தேதி  இரவு முதல்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 14ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  சென்னை பயணிகளின் வசதிக்காக  மட்டும் 11,176 சிறப்புப் பேருந்துகளை அரசு  போக்குவரத்து கழகம் இயக்குகிறது. அதன்படி,    கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், ராமேஸ்வரம், மதுரை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி. புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, சேலம், கோயம்பத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, எர்ணாகுளம், திண்டிவனம், ஜெயங்கொண்டம், விழுப்புரம், போரூர், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி,திருக்கோவிலூர், அரியலூர், விருத்தாச்சலம், செந்துறை, வந்தனாரி, கடலூர், சிதம்பரம் திருவண்ணாமலை, புதுச்சேரி, திண்டிவனம், வடலூர், நெய்வேலி, காட்டுமன்னார் கோவில் செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், ஆற்காடு, வேலூர், செய்யாறு, ஆரணி, திருப்பத்தூர், ஒசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள், திருப்பதி செல்லும் பேருந்துகள், கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநில மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். சேலம், கும்பகோணம், திருச்சி, திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும். இந்த மூன்று பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் இன்றுமுதல் புதன்கிழமை வரை 24 மணிநேரமும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து, ரயில்களை தவிர்த்து சொந்த வாகனங்களில் செல்லும் மக்கள் பெருங்களத்தூா் வழியாக செல்வதைத் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக திருப்போரூா் – செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னை பயணிகளின் வசதிக்காக மாநகர  போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  சென்னையில் இருந்து நேற்று (அக் 28) ஒரே நாளில் அரசு பேருந்துகள் மூலம் 1,10,745  பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துதுறை தெரிவித்து உள்ளது. மேலும், நேற்றைய தினம் வழக்கமாக இயங்ககூடிய 2,092 பேருந்துகள் உடன் கூடுதலாக 369 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது,.

அத்துடன்,  அரசுப் பேருந்துகளில் இன்னும்  69% இருக்கைகள் உள்ளன என்றும், தீபாவளிக்கு அரசு பேருந்துகளில் 31% இருக்கைகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்றே முன்பதிவு செய்வீர்  என போக்குவரத்துத்துறைச் செயலாளர் ர் பனீந்திர ரெட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.