சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் பட்டாசு எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன் , பயணிகளின் வசதிக்காக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதையொட்டி, 14000 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை இயக்குகிறது. மேலும், சென்னையில் பயணிகளின் வசதிக்காக மாதவரம், கோயம்பேடு, கிளம்பாக்கம் இடையே 300 சிறப்பு மாநகர பேருந்துகளையும் 28ந்தேதி முதல் இயக்கி வருகிறது.
இநத் நிலையில், பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப, மெட்ரோ ரயில்கள் அதிகபட்சமாக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தேவைக்கு ஏற்ப, மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி, தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், சென்னை மெட்ரோ ரயில்களில், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2.50 லட்சமாக இருந்த தினசரி பயணிகள் எண்ணிக்கை தற்போது 2.80 லட்சம் முதல் 3 லட்சமாக உயர்ந்துள்ளது.
தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், மற்ற நாட்களைவிட பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது, 2 வழித்தடங்களில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
அதுபோல, மெட்ரோ ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.