சபரிமலை
பக்தர்கள் சபரிமலை கோவிலில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த 16 ஆம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. தினமும் அய்யப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நளையுடன் மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.
இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. வழக்கமாக மாத பூஜை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வலிய நடை பந்தல் வரை மட்டுமே இருக்கும். தற்போது பக்தர்கள் சரம் குத்தி வரை (2 கி.மீ தூரத்திற்கு) நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
மாத பூஜை சமயத்தில் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு குறைவான காவலர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட170 காவலரால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. எனவே பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக 18-ம் படிக்கு கீழ் வாவரு நடை, கற்பூர ஆழி மற்றும் மகாகாணிக்கை பெட்டியை சுற்றியுள்ள பகுதியில், எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது கூட்டம் குவிந்ததை சமாளிக்க முடியாமல் போனதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அடுத்த மாதம் 15 ஆம் தேதி மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஆன்லைன் மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முலம் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.