மோதிஹாரி: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூரண மதுவிலக்கு உள்ள மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இங்கு அடிக்கடி கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு 65 பேர் பலியான நிலையில், கடந்த 2023ம் ஆண்டும் பலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்,  தற்போது பீகாரின் மோதிஹாரி பகுதியில் கள்ளச்சாராம் குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 27 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து,  பீகாரின் மோதிஹாரியின் பல்வேறு பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது அதிக அளவு நச்சு மது மற்றும் பிற இரசாயனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில்,  பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மேலும், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் சாவு தொடர்பாக, விளக்கம் கேட்டு, மாநில மதுவிலக்கு துறையின் ஏழு அதிகாரிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும்,  மோதிஹாரியில் உள்ள துர்கௌலியா, ஹர்சித்தி, சுகௌலி, ரகுநாத்பூர் மற்றும் பஹர்பூர் ஆகிய இடங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் “கடமைகளை தவறவிட்டதற்காக” இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ஒன்பது சகோகிதார் உட்பட மேலும் 11 காவலர்கள் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’  கூறினார்.

இதற்கிடையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் நிதிஷ்குமார், “மோதிஹாரியில்  நடந்தது குறித்து  நான் மிகவும் வேதனைப்படுகிறேன்… இதுபோன்ற சம்பவங்களில் இறப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்க  எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், மாநிலத்தில்  இன்றுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, மேலும் போலியான  மதுக்களை  உட்கொண்டு மக்கள் இறக்கின்றனர். மது விற்பனை நடைபெறுவதை கண்காணித்து முழுமையாக தடை  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்,

இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகை வழங்க முடிவு செய்துள்ளோம்  ஆனால், கள்ளச்சாராயம் குடித்து மரணம் நிகழ்ந்ததாக அவர்களது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாக அளித்தால் மட்டுமே தொகை வழங்கப்படும். மேலும், மதுபானம் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்,” என்றார். மதுவிலக்கு மற்றும் மாநில அரசின் தடைச் சட்டங்களை ஆதரிப்பதற்காக மக்களை ஊக்குவிப்பதாக குடும்ப உறுப்பினர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பீகார், மாநில முதல்வர் நிதிஷ் குமார்,  “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது . குடித்தால் உயிரிழப்பீர்கள் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறோம். அப்படியிருந்தும், குடித்து உயிரிழப்பவர்களுக்கு எப்படி இழப்பீடு தர முடியும்? என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், தற்போது, நிபந்தனையின் பேரில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து உள்ளார்.