மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில் குறைந்தது 19 இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்னந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவனது பெற்றோருக்கு சம்மன் அனுப்பிய போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், தனது நண்பனுக்கும் அவனுக்கும் இடையே ஏற்பட்ட பண தகராறில் நண்பனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய காவல்துறையினர் அவனை சிறார் சிறையில் அடைக்கத்துள்ளனர்.

மேலும், மற்ற விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது குறித்தும் இவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இந்த “குறும்புத்தனமான மற்றும் சட்டவிரோதமான” நடவடிக்கை கண்டிக்கத்தக்கது, “இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் கவலைக்குரியவை, மேலும் பயணிகளின் பாதுகாப்பையும் விமானத்தின் சீரான செயல்பாட்டையும் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” என்று கூறினார்.

இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு சம்மன்…