டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக, உச்சநீதி மன்ற மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவரது பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார்.

தற்போது இந்திய தலைமை நீதிபதி  சந்திரசூட் அடுத்த மாதம் (நவம்பர் ) 10ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து மூத்த நீதிபதி சஞ்சிவ் கன்னா பெயர் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

தலைமைநீதிபதி  சந்திரசூட்டின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி கன்னா பதவியேற்பார். அவரது பதவி காலமும் வெறும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும்.  நீதிபதி கண்ணாவின் ஓய்வு  மே 13, 2025 வரை மட்டுமே உள்ளது-

தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்  கடந்த நவம்பர் 2022 முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.  வருகின்ற நவம்பர் 10-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார்.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் சஞ்சீவ் கன்னா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா பற்றி…. 

டெல்லியைச் சேர்ந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா 1960 மே 14 அன்று பிறந்தார். 1983 இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு, டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் தனது பயிற்சியைத் தொடங்கினார். சிறிது காலத்திற்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டம், நேரடி வரிகள், நடுவர் மற்றும் வணிக விவகாரங்கள், நிறுவனச் சட்டம், நிலச் சட்டங்கள், சுற்றுச்சூழல் மற்றும் மாசுச் சட்டங்கள் மற்றும் மருத்துவ அலட்சியம் போன்ற பல்வேறு துறைகளில் அவர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களில் தொடர்ந்து ஆஜரானார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், நீதிமன்றத்தால் அமிக்ஸ் கியூரியாக நியமிக்கப்பட்டதற்கும் பல கிரிமினல் வழக்குகளை அவர் வாதிட்டார்.  டெல்லி உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறையின் மூத்த நிலை வழக்கறிஞராக சுமார் ஏழு ஆண்டுகள் நீண்ட காலம் பணியாற்றியவர்.

2004 ஆம் ஆண்டில், அவர் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்திற்கான நிலையான ஆலோசகராக (சிவில்) நியமிக்கப்பட்டார். 2005 இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்ட அவர், 2006 இல் நிரந்தர நீதிபதி ஆக்கப்பட்டார்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, ​​பல்வேறு காலகட்டங்களில் தில்லி ஜூடிசியல் அகாடமி, டெல்லி சர்வதேச நடுவர் மன்றத்துடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தார். மையம் மற்றும் மாவட்ட நீதிமன்ற மத்தியஸ்த மையங்களில் பணியாற்றினார். கடந்த 2019ம் ஆண்டு  ஜனவரி 18ந்தேதி  அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்ட அவர், 13 மே 2025 அன்று ஓய்வு பெற உள்ளார்.

நீதிபதி சஞ்சீவ் கன்னா, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் சஞ்சீவ் கன்னாவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.