இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கடந்த இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதில் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற மூன்று சர்வதேச விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஏர் இந்தியா, இண்டிகோ, அகாசா ஏர் நிறுவனங்களின் விமானங்களுக்கு வந்த இந்த மிரட்டல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

எக்ஸ் சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விசாரணையில், சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்னந்த்கான் பகுதியைச் சேர்ந்த நபரின் எக்ஸ் பக்கத்தில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், தனது தந்தையின் எக்ஸ் பக்கத்தில் இருந்து 17 வயது சிறுவன் இந்த மிரட்டல் பதிவுகளை அனுப்பியதாகத் தெரியவந்ததை அடுத்து மும்பை காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு தந்தை மற்றும் மகன் இருவருக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முன்னதாக, மும்பையில் இருந்து இன்று டெல்லி சென்ற இண்டிகோ விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தலால், அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.

அதேபோல், டெல்லியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த அகாசா ஏர் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மீண்டும் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

தவிர, உத்தரகாண்ட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரும் பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் அரங்கேறிய இந்த சம்பவங்களை அடுத்து விமான பயணிகள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர்.