மதுரை: மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச பட்டா, வீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக, அதாவது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் 1929-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் 99 வருடம் குத்தகைக்கு பெற்றார்கள். அவர்களின் குத்தகை 2028-ல் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அங்குள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்பட்டது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அங்கேயே இருக்க உத்தரவிட வேண்டும் அல்லது அவர்களுக்கு மறுவாழ்வு திட்டம் அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற தடை விதிக்கப்பட்டு, மனுக்கள் அனைத்தும் வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில், “தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மாஞ்சோலை தனியார் எஸ்டேட் நிறுவனமான பிபிடிசி நிறுவனம் சார்பில், இந்த விவகாரத்தில் சிலர் அரசியல் நோக்குடன் தலையிட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பிலும் விரிவான வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்.23க்கு ஒத்திவைத்தனர்.