சென்னை: சென்னையில் மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்து வரும் துணைமுதல்வர் உதயநிதி,  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று கூறினார். மேலும் சென்னையில் இதுவரை மின்தடை இல்லை என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் எனவும், தொடர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 17) வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை உள்பட 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக். 14) நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள், உடனடியாக சென்று தண்ணீரை வெளியேற்றி வருவதுடன், முறிந்த மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

இதற்கிடையில்,  மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக  துணைமுதல்வர் உதயநிதி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை, சென்னை கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் உள்பட பல பகுகளில் நள்ளிரவு ஆய்வு செய்ததுடன், இன்று காலை மீண்டும் கொட்டும் மழையில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

, இன்று (அக். 15) காலை சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது? பாதிப்புகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆய்வு செய்தார். அவருடன்  அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சென்னை மேயர் பிரியா ஆகியோர்  இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  சென்னையில் ஏற்படும் மழை பாதிப்புகளை அரசும், மாநகராட்சியும் உடனுக்குடன் சரி செய்து வருவதாக கூறியதுடன்,  சென்னையில் 89 படகுகள், பிற மாவட்டங்களில் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயாராக இருக்கிறது.  சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் தயாராக உள்ளது. மொத்தம் 931 மையங்கள் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது.

சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மழை வெள்ளத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவத்துறையும், மாநகராட்சியும் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க ஆயிரம் சிறப்பு முகாம்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னையில் மொத்தம் 8 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் சென்னைக்கும் அவர்கள் அழைத்துவரப்பட்டு வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தபடுவார்கள் என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை நாளையும் அதிகனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய  உதயநிதி, இதுகுறித்து   இன்று மாலைக்குள் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.

மேலும்,  சென்னை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மின்தடை ஏற்படவில்லை என்றவர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

மேலும்,  சென்னையில் 20 சுரங்கப்பாதைகளில் வாகன போக்குவரத்து உள்ளது என்றவர்,  2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவுத்ம,  சிவகங்கையில் நேற்று 13.4 செ.மீ, விருதுநகரில் 7 செ.மீ. மழை பெய்த நிலையிலும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்றார்.

கடந்த முறை போன்ற இந்த முறை செல்போன் டவர் பிரச்சனை ஏதும் தற்போது வரை ஏற்படவில்லை என்றும் கூறினார்.