சென்னை: நூறடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ள,  வாகனஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு ஏற்கனவே  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று நள்ளிரவு இரவு  முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இதனால் சென்னையின் சில பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. பல பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டாலும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

இந்த நிலையில் வடபழனியில் பெரியார் பாதை, கோயம்பேடு 100 அடி சாலை பகுதியில் நீர் தேங்கி உள்ளது. இதை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டதால், தொடர்ந்து மழை பெய்து வருவதால், தண்ணீர் தேங்குவது அதிகரித்து வருகிறது.  கோயம்பேட்டில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் மார்க்கத்திலும், கிண்டியில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் மார்க்கத்திலும் மழை நீரானது அளவுக்கு அதிகமாக ஓடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த  20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து, கோயம்பேட்டில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் மார்க்கம் இருவழிப்  பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.