டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் சம்பளம்  வழங்க   மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளாது.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும். இதன்படி, 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2,028.57 கோடி போனஸாக வழங்கப்படும் என மத்திய  ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்  அக்டோபர் 3ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் கேபினட் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில் சென்னை மெட்ரோ 2வது கட்ட விரிவாக்கம், விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு, ரயில்வே  ஊழியர்களுக்கான போனஸ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து இருப்பதாக கூறினார். மத்திய அரசின் இந்த முடிவு மூலம் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும் என்றார்.

தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகைக்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த தொகை ரயில்வேயில் பணியாற்றும் பல்வேறு தரப்பு ஊழியர்களுக்கும் கிடைக்கும். அதாவது, ரயில்வே டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், டிரெயின் மேனேஜர்ஸ், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், சூப்பர்வைசர்ஸ், டெக்னிஷியன்ஸ், டெக்னிஷியன்ஸ் ஹெல்பர்ஸ், பாயின்ட்ஸ்மேன், அமைச்சரவை ஊழியர்கள் மற்றும் பிற குரூப் XC ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும். ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.