பாட்னா

நேற்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிசோர் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இவர் பாஜக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை கைவிட்டு அரசியலில் நுழைய உள்ளதாக அறிவித்தார். பீகாரை மையப்படுத்தி அரசியல் செய்ய உள்ளதாக தெரிவித்து ‘ஜன் சுராஜ்’ எனும் இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் பிரசாந்த் கிஷோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.

பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டப்பட்டுள்ள அரசியல் கட்சியை  நேற்று தொடங்கியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் இது குறித்து,

”நாங்கள் ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வோம். மதுக்கடைகளை திறப்போம். மக்களுக்கு மாற்று அரசியலை அளிப்போம். கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள், ஆர்.ஜே.டி., கட்சிக்கும், பா.ஜ.க வுக்கும் மாறிமாறி ஓட்டுப் போடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும். மாற்று அரசியலை கொண்டு வருபவர்கள் வாரிசு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது. 2025 சட்டசபை தேர்தலில் எங்கள் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும்”

என்று தெரிவித்துள்ளார்.