அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெர்ரிக்கு மேற்கே 10 மைல் தொலைவில் நேற்றிரவு 11:10 மணிக்கு ஹெலீன் சூறாவளி கரையை கடந்தது.

ஹெலீன் சூறாவளி மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரித்திருந்தது.

130 மைல் வேகத்தில் காற்று வீசும் என்பதால் வீடுகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம், மரங்களை வேரோடு சாய்க்கலாம் மற்றும் மின் கம்பிகளை வீழ்த்தலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

இந்த புயல் “மிகவும் ஆபத்தான” வகை 4 சூறாவளியாக அறிவிக்கப்பட்டு மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் நேரத்தில் காற்று 140 மைல் வேகத்தை எட்டியது,

இதனால் புளோரிடாவில் 2,50,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின் தடையால் பாதிக்கப்பட்டது.

ஹெலீன் சூறாவளி கரையை கடப்பதை அடுத்து புளோரிடா, ஜார்ஜியா, கரோலினாஸ், விர்ஜினியா மற்றும் அலபாமா ஆகிய இடங்களில் ஜனாதிபதி ஜோ பிடன் அவசர நிலையை அறிவித்தார்.

ஹெலீன் சூறாவளி தொடர்ந்து அப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.