சென்னை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலஜி அக்டோபர் 1 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்    சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 12 ம்தேதி இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை தொடர அனுமதிக்கும் கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத்துறையிடம் இருந்து கிடைக்கவில்லை எனவே அனுமதி கடிதத்தை சமர்பிக்க 3 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கோரி இருந்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்ததால் தற்போது பழைய காரணத்தை கூறி கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

விசாரணையை நேற்று  ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட 47 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.