சென்னை ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதல் குற்றவாளி (ஏ-1) என குறிப்பிட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதில் மழைநீர் வடிகால்களின் 51 டெண்டர்கள் மற்றும் பேருந்து வழித்தட சாலைகளின் இரண்டு டெண்டர்கள் குறித்து விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பண ஆதாயத்துடன் டெண்டர்கள் வழங்கியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து ரெடி மிக்ஸ் கான்கிரீட் (ஆர்எம்சி) விலையை உயர்த்தியுள்ளனர். திட்டங்களுக்கு உண்மையில் M sand பயன்படுத்தப்பட்ட நிலையில் ஆற்று மணல் பயன்படுத்தியதாகக் கூறி ஒப்பந்ததாரர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேலுமணி, அப்போது கேசிபி இன்ஜினியரிங் நிறுவனரும், அதிமுக இளைஞரணி உறுப்பினருமான ஆர்.சந்திரசேகருக்கு டெண்டர் குறித்த முடிவு எடுக்க, விதிகளை மீறி சுதந்திரம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான ரோஜா இல்லத்தில் அமர்ந்து கொண்டு வேலுமணியின் அமைச்சர் பதவியை சந்திரசேகர் துஷ்பிரயோகம் செய்ததாகவும் டெண்டர்களை முடிவு செய்பவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகளை நம்ப வைத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரே ஐபி முகவரியில் இருந்து மூன்று நிறுவனங்கள் டெண்டர் எடுத்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும் வேலுமணியுடன் சேர்ந்து சந்திரசேகர் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும் இந்த விவகாரத்தில் ரூ.26.61 கோடி அரசுப் பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை பொறியாளர்கள், தற்போதைய கண்காணிப்பு பொறியாளர்கள், செயல் பொறியாளர்கள் உட்பட 11க்கும் மேற்பட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.