டெல்லி: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி சீக்கியர் குறித்து கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிராக டெல்லியில் பாஜக ஆதரவு சீக்கியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவையும், இந்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.  அரசியல் முதிர்ச்சியற்ற அவரது கருத்துக்கள் தேசி துரோகம் என்று  கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை. குறிப்பாக சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது என கூறியிருந்தார். இந்தியாவில் அதுபோன்ற தடை ஏதும் இல்லாத நிலையில், அவர் உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூறியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஏற்கனவே  எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தொடர்பான கேள்விக்கு முறையான பதில் தெரிவிக்க ராகுலின் செயல் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சீக்கியர்கள் குறித்து அவர் கூறிய கருத்து மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ராகுலின் கருத்து  குறித்து  கூறிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “ராகுல் கருத்து மோசமானது. வெளிநாட்டில் இந்தியாவை பற்றி ஆபத்தான கதைகளை பரப்பி வருகிறார்” என்றார்.

வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் (காலிஸ்தான்) இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருப்பது அவர் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீக்கிய அமைப்புகள், ராகுல்காந்தி சீக்கியர்கள் தலைபாகை அணிவதை தடுக்க நினைக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில்,  ராகுலின் பேச்சுக்கு கண்டனம் பாஜக ஆதரவு பெற்ற சீக்கிய குழுவினர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள்தலைவர் சோனியா காந்தியின் வீடு முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சீக்கியர்கள் குறித்த தன்னுடைய கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் சீக்கியர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.