சென்னை

போக்குவரத்து விதிமீறல் செய்வோர் இனி கியூஆர் கோடு மூலம்  அபராதம் செலுத்தலாம் எனக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகையில், விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது.  விதிமீறலை கட்டுப்படுத்த சமீபத்தில் இதற்கான அபராதம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. அதிவேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வாகனங்கள் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் பலரும் ஈடுபட்டே வருகின்றனர்.

சிக்னல்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் இது போல் தினமும் சுமார் 6 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்படும் நபர்கள் டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, பேடிஎம், உள்ளிட்ட சேவைகள் மூலம் தங்களுக்கான அபராதத் தொகையை செலுத்தும் நடைமுறை கடந்த 2017 ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது சென்னையில் போக்குவரத்து விதி மீறலில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்டால், இனி க்யூஆா் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம் என பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, எஸ்பிஐ வங்கியுடன் சோ்ந்து அறிமுகம் செய்துள்ளது. அதாவது, அபாராதம் செலுத்த வேண்டிய நபர்கள் https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற இணையத்தளம் வாயிலாக அபராதத் தொகையினை செலுத்தலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு நேற்று தெரிவித்தது.