பெரம்பூர்: மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் நாளை (வியாழக்கிழமை) அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, செப்டம்பர் 3ந்தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன் நேற்று (செப்டம்பர் 10ந்தேதி) மதியம் 2.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வணிகர்கள் , சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் இன்று மாலை 4 மணி அளவில் பெரம்பூரில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்திற்க்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை பொதுமக்கள்அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நாளை மாலை (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.