இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல் உருவாகி உள்ளதால்,  செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம் செய்து மத்திய மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான கடந்த இரு ஆண்டுகளாக, அங்கு வசிக்கும்  மெய்தீஸ் மற்றும் குக்கி இன மக்களிடையே  இடஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது. இந்த மோதல் கடந்த  16 மாதங்களை கடந்தும் தொடர்கிறது. இந்த மோதல் காரணமாக இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதுடன், விடுகளுக்கும்தீ வைத்து வருகின்றனர். இதுவரை நடந்த  மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மணிப்பூர் மாநில மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக சில மாதங்கள் சற்று மோதல்கள் ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் எற்பட்டு வருகிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஒரு தரப்பினர்,  உருட்டை கட்டைகள், துப்பாக்கிகளை கொண்டு தாக்கிக் கொண்ட நிலையில், தற்போது ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும்  மற்றும் டிரோன்களை கொண்டு தாக்குதல்கள்  நடத்தி வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதோடு, பொதுமக்களிடையே அச்சமும் நிலவுகிறது.

இதற்கிடையில் மாநில பாஜக அரசுக்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மணிப்பூரில் இருந்து மத்திய பாதுகாப்புப் படையினர் வெளியேற வலியுறுத்தி ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இன்று  மணிப்பூர் ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். மாணவர்களை போலீசார், பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி பாதுகாப்புப் படை விரட்டியடித்தது.

இதைத்தொடர்ந்து அங்கு  போராட்டம் தீவிரமடைந்து வருவதால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக இம்பால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்.15-ம் தேதி வரை மணிப்பூர் முழுவதும் இணைய சேவையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.