சென்னை: குத்தகை பாக்கி காரணமாக கிண்டியில் உள்ள பிரபலமான குதிரை ரேஸ் மைனதானத்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், இன்று அங்கு பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.
இந்த மைதானத்துக்கான வாடகை பாக்கி ரூ.780 கோடியை செலுத்தாதது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கிண்டி ரேஸ் கிளப்பை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது கிண்டி ரேஸ் கோர்ஸ் மைனதாதுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று காலை கிண்டி தாசில்தார் தலைமையிலானவருவாய்த்துறை அதிகாரிகள் 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தனர்.
சென்னையின் மத்திய பகுதியான கிண்டி பகுதியில் பல ஆண்டுகளாக குதிரை பந்தயம் நடைபெற்று வந்த மைதானமே கிண்டி ரேஸ் மைதானம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. சுமார் 160 ஏக்கர் பரபரப்பளவுள்ள இந்த நிலத்தை, கடந்த 1945 ஆம் ஆண்டு மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு, 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகைக் காலம் வரும் 2044 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் காலத்தின் மாற்றத்துக்கு ஏற்க வாடகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் இந்த வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் – கிண்டி வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்தார். ஆனால், அதை ஏற்க மறுப்பு தெரிவித்தது ரேஸ் கிளப். 1945 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது தொடர்பாக எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தது.
இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, 1970 ஆம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை செலுத்தும்படி நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்த நோட்டீஸை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் , ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வசதி படைத்த பணக்காரர்கள் குதிரைகள் மீது பெரிய தொகையை பந்தயம் கட்டி விளையாடுவதற்காக மாநகரின் மையப்பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு நடைபெறும் செயல்களில் எந்தப்பொதுநலனும் இல்லை. அதே வளையில், கிளப் நிர்வாகம் ” அந்த நிலத்தை உள் வாடகைக்கு விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருகிறது. எனவே, இந்த நிலத்தை மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம் என உத்தரவிட்டது.
மேலும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நோட்டீசின்படி செலுத்த வேண்டிய ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்தவேண்டும். தவறும் பட்சத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்டு, அந்த நிலத்தை பொதுநலனுக்காக அரசு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு. ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்து அதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.