பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் நடித்த எமர்ஜென்சி படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த படத்தின் பல காட்சிகளுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் இருந்து 3 காட்சிகளை நீக்கவும் 10 மாற்றங்களை செய்யவும் கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்தப் படத்திற்கு சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து படத்திற்கு சான்றிதழ் வழங்குவதை சிபிஎஃப்சி நிறுத்திவைத்தது.

ஆபரேஷன் புளூ ஸ்டார், பிந்தரன்வாலே உள்ளிட்ட காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் சீக்கியர்களை பயங்கரவாதிகளாக காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீக்கிய அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தது.

படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, சிபிஎஃப்சி இதற்கான தணிக்கை சான்று வழங்காமல் நிறுத்திவைத்தை அடுத்து விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது.

சான்று வழங்க செப்டம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான அடுத்த விசாரணை செப்டம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் எமர்ஜென்சி படத்திற்கு சில மாற்றங்களுடன் U/A சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளில் பெரும்பாலானவை சீக்கிய அமைப்புகளால் ஆட்சேபனை செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

சென்சார் சான்று வழங்கப்பட்டதை அடுத்து இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்பட ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போவதால் எந்த மாற்றமும் ஏற்படாது : மும்பை நீதிமன்றம்