கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாக தயாராகி வருவதை அடுத்து சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்கக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜீ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கொலபாவால மற்றும் பிர்தோஷ் பூனாவாலா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜீ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், “கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீஸாவதற்கு தயாராகி வருகிறது அதனால் சென்சார் போர்டு இதற்கான சான்றை வழங்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சிபிஎஃப்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட், “சென்சார் சான்றிதழை வழங்குவதற்கு முன்பு படத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளை நிவர்த்தி செய்யுமாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வாரியத்திற்கு அறிவுறுத்தியதாக” நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ம.பி. நீதிமன்றம் செப். 18 வரை அவகாசம் வழங்கியுள்ள நிலையில் சிபிஎஃப்சி இன்னும் சான்றிதழை வழங்கவில்லை என்றும், படங்களின் சான்றிதழ் இன்னும் உரிய அதிகாரிகளால் பரிசீலனையில் இருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

மேலும், “நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் படத்தின் இயக்குநர் இந்த விவகாரத்தில் உள்ள உணர்வுபூர்வமான விஷயத்தை புரிந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், “படத்திற்கான சென்சார் சான்று வழங்குவதே சிபிஎஃப்சி-யின் வேலை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது காவல்துறையின் கடமை. தவிர, மத்திய பிரதேச நீதிமன்ற விசாரணை மும்பை நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது” என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்பதை ஏற்றுக்கொண்டனர், மேலும் “ம.பி. நீதிமன்ற விசாரணை மும்பை நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்ற போதும் ஒரு வாரம் தள்ளிப்போவதால் எந்த ஒரு பெரிய மாற்றமும் வந்துவிடப்போவதில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

1975ம் ஆண்டு எமர்ஜென்சி-யை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடமேற்று நடித்துள்ளார்.

பஞ்சாப் கலவரக் காட்சிகள் மற்றும் பிந்த்ரன்வாலே தொடர்பான காட்சிகள் என சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறி சீக்கிய அமைப்புகள் இந்தப் படத்திற்கு எதிராக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

ஏற்கனவே தேர்தல் தோல்வி காரணமாக கூட்டணி கட்சிகளின் தயவில் தொங்கு அமைச்சரவையை அமைத்துள்ள பாஜக தேர்தலுக்குப் பிறகு பல்வேறு விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறது.

இந்த நிலையில், தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் படத்திற்கு எதிராக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கான சென்சார் சான்று வழங்கும் முன் தீவிர ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கங்கனா ரணாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்… சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…