சென்னை:  நடிகர் விஜயின்  அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு  விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ந்தேதி  நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் விஜய் கட்சி நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதற்காக,  2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவங்கி அரசியலில் அதிகாரபூர்வமாக இறங்கி உள்ளார். தொடர்ந்து  சமூக பணிகளை மேற்கொண்டு வருவதுடன்,  மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களை ஊக்குவித்து வருகிறார். இதன்முலம் இளைஞர் சமுதாயத்தை தன்னை நோக்கி இழுக்க முயற்சித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து தனது கட்சியை பிரபலப்படுத்தும் நோக்கில், கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். அதற்கான இடம் தேடும் பணி சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இறுதியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அந்த இடத்தில் வரும் செப்டம்பர் மாதம் 23ந்தேதி   மாநாட்டை சிறப்பாக நடத்த தேவையான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. சுமார் 10 லட்சம் தொண்டர்கள்  மாநாட்டில் கலந்துகொள்ளும்  வகையில், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிவறை  வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.   இந்த மாநாடு வரும் செப்டம்பரில் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  தவெக கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மற்றும் சில கட்சி நிர்வாகிகள், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக கட்சி மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.