சென்னை :  தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“கேரள கடலோர பகுதிகளின் மேல்  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதைத்தொடர்ந்து, தமிழகத்தில்  கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களிலும்  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவிற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 ஆக. 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் வரும் ஆக. 19 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 17 வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.