டெல்லி: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.  மேலும் “ஊழல் பல ஆண்டுகளாக இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. ஊழலுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்துள்ளோம், அதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றும், . பெண்கள் மீதான கற்பழிப்புகள் மற்றும் வன்கொடுமைகள் நடப்பது ஒரு கொடூரமான போக்கு. இந்த பாவத்தை செய்பவர்கள் தூக்கு தண்டனைக்கு உள்ளாக்கப்படு வார்கள் என்றும் உறுதி  தெரிவித்தார்.

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் தியாகங்களுக்கு பிறகு இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது. இதையடுத்து ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இன்று  நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 11வது முறையாக இன்று தேசிய கொடியை ஏற்றினார்.  செங்கோட்டையில் நடைபெற்ற  சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டையில் நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

தேசிய கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது, “ சுதந்திர திர போராட்டத்தில் இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பேரிடர்களை எதிர்கொண்டாலும் நாம் அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் வேதனை அளிக்கிறது. நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணைநிற்போம். நாட்டை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பலர் உழைத்து வருகின்றனர். விவசாயிகள், ராணுவ வீரர்கள் நாட்டுக்காக கடுமையாக உழைக்கின்றனர். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கிறது.

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். அப்போது பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள்தான் போராடினார்கள். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. இது 140 கோடி பேரின் கனவு” நாட்டு மக்கள் இந்த பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். 

40 கோடி இந்தியர்களால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. 140 கோடி பேர் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம்.

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள். 20247ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும். உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை இந்தியா வெகு விரைவில் அடையும்.

நாட்டின் இளைஞர்கள் மெதுவாக நடக்க விரும்பவில்லை. புதிய உயரங்களை வேகமாக அடைய விரும்புகின்றனர். இந்தியாவிற்கு இது பொற்காலம் என்று கூற விரும்புகிறேன். உலக நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும், இது பொற்காலம்… இந்த வாய்ப்பை வீணடிக்க விடக்கூடாது… இந்த வாய்ப்பை, கனவுகளுடனும், தீர்மானங்களுடனும் முன்னோக்கிச் சென்றால், விக்சித் பாரத் 2047ன் இலக்கை சாதிக்க முடியும்.

“பாதுகாப்பு துறையில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். இன்று, பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் நமக்கென தனி அடையாளம் உள்ளது. பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது” என்றார்.

ஜல்ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். 2047ல் வளர்ந்த இந்தியா என்பது வெற்று முழக்கம் அல்ல. அது 140 கோடி இந்தியர்களின் கனவு. இந்தியாவில் நீதித்துறையில் மாற்றம் தேவை. மாற்றங்களை கொண்டு வருவோம்.”

நாட்டில் சுமார் 25 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் பெருமிதமாக கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும். விக்சித் பாரத் 2047 ‘ஸ்வஸ்த் பாரத்’ ஆகவும் இருக்க வேண்டும், இதற்காக நாங்கள் ராஷ்ட்ரிய போஷன் மிஷனைத் தொடங்கியுள்ளோம்.” என கூறினார்.

” இன்று செங்கோட்டையில் இருந்து எனது வலியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த விரும்புகிறேன். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து சமூகமாக நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் – இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு, சமூகம், மாநில அரசுகள் இதைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும், இந்த கொடூரமான செயல்களைச் செய்பவர்களுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்கள் மீதான கற்பழிப்புகள் மற்றும் வன்கொடுமைகள் நடப்பது ஒரு கொடூரமான போக்கு. இந்த பாவத்தை செய்பவர்கள் தூக்கு தண்டனைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.”  என்றார்.

, “விண்வெளித் துறை ஒரு முக்கிய அம்சம். இந்தத் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். இன்று, பல ஸ்டார்ட்அப்கள் இந்தத் துறையில் நுழைகின்றன. மாறி வரும் விண்வெளித் துறையானது இந்தியாவை உருவாக்குவதற்கு இன்றியமையாத அங்கமாகும். ஒரு சக்திவாய்ந்த தேசம், நீண்ட கால யோசனையுடன் இந்தத் துறைக்கு பலம் கொடுத்து வருகிறோம்” என பேசினார்

எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டதால், நாங்கள் பெரிய அளவிலான சீர்த்திருத்தங்களை செய்துகொண்டிருக்கிறோம். இந்த சீர்த்திருத்தங்கள் எல்லாம் வெறும் செய்திகளுக்காகவோ அல்லது சில நாட்கள் பாராட்டுக்காகவோ அல்ல. எந்தவொரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் நாங்கள் சீர்த்திருத்தங்கள் செய்யவில்லை. வளர்ச்சிக்காக சீர்த்திருந்தங்களை செய்கிறோம். நாடு தான் முக்கியம் என பிரதமர் மோடி பேசினார்.

“விக்சித் பாரத் 2047 க்கு, நாங்கள் நாட்டு மக்களிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டது. அரசுக்கு வந்திருக்கும் பல பரிந்துரைகள் நம் நாட்டு குடிமக்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றன. சிலர் இந்தியாவை திறன் தலைநகராக மாற்ற பரிந்துரைத்தனர், மேலும் சிலர், இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்று கூறினர். நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்றும், ஆட்சி மற்றும் நீதி அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்றும் கோரியிருந்தனர். கிரீன்ஃபீல்ட் நகரங்களை உருவாக்குதல், திறன் மேம்பாடு, இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் – இவையே குடிமக்களின் கோரிக்கைகளாக இருந்தது. தேசத்திற்கு இவ்வளவு பெரிய கனவுகள் உள்ளன.” என கூறினார்.

” கொரோனா காலத்தை எப்படி மறக்க முடியும்? உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நமது நாடு தடுப்பூசிகளை மிக வேகமாக வழங்கியது. இதே நாட்டில் தான் பயங்கரவாதிகள் வந்து எங்களை தாக்கினார்கள். நாட்டின் ஆயுதப் படைகள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும்போது, வான்வழித் தாக்குதல் நடத்தும்போது, நாட்டின் இளைஞர்கள் பெருமிதம் கொள்கின்றனர். அதனால்தான் நாட்டின் 140 கோடி குடிமக்களும் இன்று பெருமை கொள்கிறார்கள்.”

இவ்வாறு கூறினார்.

பிரதமர் மோடி 11வது முறையாக தொடர்ந்து தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றியுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 10 முறை தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றிய பிரதமர் மன்மோகன்சிங்கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். சுதந்திர தின உரை முடிந்த பிறகு முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்க உள்ளார்.