சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை விடுமுறையையொட்டி,  சென்னையில் இருந்து இயக்கப்பட்ட தினசரி பேருந்து மற்றும்   சிறப்புப் பேருந்துகளில் நேற்று (அக்டோபர் 10ந்தேதி) மட்டும் சுமார்  1.62 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் சனி ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை  வந்ததால், பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் ஆயிரக்கணக்கான  சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து மட்டும் ஒரே நாளில் 1.62ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை (ஆயுதபூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (செப். 10) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி இயக்கப்பட்டது. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,028 பேருந்துகளும் என மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் பயணித்துள்ளனர் .

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்.9 ஆம் தேதி (புதன்கிழமை) 225 பேருந்துகள் இயக்கப்பட்டன.

அக்.10ம் தேதி (வியாழக்கிழமை) அன்று 880 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. Advertisement சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, ஆகிய இடங்களுக்கு அக்.9 ஆம் தேதி 35 பேருந்துகளும் அக்.10 ஆம் தேதி 265 பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெங்களூரு, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாதவரத்திலிருந்து அக்.9 மற்றும் 10 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.