சென்னையைச் சேர்ந்த பிரபல இனிப்பு கடை மற்றும் உணவகமான அடையார் ஆனந்த பவனில் வாங்கிய இனிப்பில் கரப்பான் பூச்சி இருந்ததை அடுத்து அந்த உணவகத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எண்ணூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் ராயபுரத்தில் உள்ள அடையார் ஆனந்த பவன் கிளையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி அங்கூர் ஜாமூன் மற்றும் ப்ரூட் அல்வா ஆகிய இனிப்புகளை வாங்கியுள்ளார்.
தீபாவளிக்கு முன்பு வாங்கிய இந்த இனிப்பை சாப்பிட்ட அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து வீட்டில் மிச்சம் இருந்த ஸ்வீட் பாக்கெட்டை திறந்து பார்த்த போது அதில் ப்ரூட் அல்வாவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து கடைக்கு போன் செய்து பேசியதில் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறி சமாளித்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் நேராக முறையிட்டும் சரியான பதில் இல்லாததை அடுத்து அந்த இனிப்பை உணவுப் பாதுகாப்புத் துறை அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடத்தில் அந்த இனிப்பை பரிசோதனைக்கு கொடுத்துள்ளார்.
பரிசோதனையில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் பாக்க்டீரியா இருந்ததையும் அதில் கரப்பான் பூச்சி இருந்ததையும் உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தரமற்ற உணவுப் பொருளை விற்றதற்கா ரூ. 50,000 அபராதமும் வழக்கு செலவுக்காக ரூ. 5,000மும் வழங்க உத்தரவிட்டது.