சென்னை: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணனை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அவர் இன்று மேயராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இன்று ஒரே நாளில் வேட்புமனுத்தாக்கல், வேட்புமனு பரிசீலனை மற்றும் தேர்தல் நடைபெற உள்ளது.

நெல்லை நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த திமுக  சரவணனுக்கும்,  திமுக உள்பட மற்ற கட்சி  கவுன்சிலர்களுக்கும் இடையே  மோதல் போக்கு நீடித்தது. இதனால், மற்ற கவுன்சிலர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர். இதனால் மாநகராட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து திமுக மேலிடத்தின் உத்தரவின்படி,  சரவணன் தனது  மேயர் பதவியை கடந்த மாதம்  ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி  இன்று  (திங்கட்கிழமை) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு மறைமுக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மேயர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  மேயர் வேட்பாளராக போட்டியிடும் கவுன்சிலர்கள் நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மைய கூட்ட அரங்கில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீதான பரிசீலனை காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், அதனை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 இதைத்தொடர்ந்து திமுக தலைமை அறிவுறுத்தலின்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லை  வந்து திமுக கவுசிலர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.  வண்ணாரபேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மாநகராட்சியில் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.  அவர்களுடன்  கூட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து புதிய மாநகராட்சி வேட்பாளராக  25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அறிவிக்கப்பட்டார். அவரை  போட்டியின்றி   அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். மேலும்,   அவருக்கு  கவுன்சிலர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

கவுன்சிலர் கிட்டு அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளில் ஒருவர். அவர் நெல்லை மாநகராட்சியில் 3-வது முறையாக கவுன்சிலராக தேர்ந்ததெடுக்கப்பட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிட்டு, தனது வார்டு பகுதி முழுவதும் எப்போதும் சைக்கிளில் தான் பயணம் செய்யக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.