சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் நுழைவாயிலாக ஜிஎஸ்டி சாலையில் அமைந்திருக்கும் பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நேற்று முதல் முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பழைய பெருங்களத்தூரில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக தாம்பரம் செல்லவும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் வாகனங்களும் பெருங்களத்தூரில் நிற்காமல் செல்லும் வகையில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லவும் சதானந்தபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக செங்கல்பட்டு செல்லவும் அமைக்கப்பட்டு வந்த மற்றோரு பகுதி நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

பழைய பெருங்களத்தூரில் இருந்து வருபவர்கள் செங்கல்பட்டு செல்லவும் சதானந்த புரத்தில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம் செல்லவும் இந்த மேம்பாலத்தின் நடுவே வட்ட வடிவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

மேலும், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதை அடுத்து தாம்பரம் மாநகராட்சி பெரும் மாற்றத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.