மயிலாடுதுறை: பாமக நிர்வாகி கொலை தொடர்பாக தஞ்சை, மயிலாடுதுறையில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதமாற்றம் செய்வதை அவர் கண்டித்ததாகவும், அதில் ஏற்பட்ட விரோதத்தில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 13 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, பாமக பிரமுகரான தஞ்சை ராமலிங்கத்தை கொலை செய்த கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அறிவித்துள்ளது
கொலை நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்புடைய குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ், நிஜாமலி, ஷர்புதீன், முகமது ரிஸ்வான், அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை அப்போது காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (39), கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத்(42), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன்(33), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத்(32), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன்(33) ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை நடத்தி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரழுந்தூர் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் அதிகாலை முதல் சென்னையிலிருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை முன்னிட்டு சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.