சென்னை: கேரள நிலச்சரிவு பலி 50ஆக உயர்ந்துள்ள நிலையில்,   தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக கேரள மாநில அரசுக்கு  ரூ.5 கோடி நிதி  அறிவித்து உள்ளது. மேலும் மீட்புபணியில் ஈடுபட்ட,  தமிழ்நாட்டில் இருந்து 260 மீட்பு படையினர் கேரளா விரைந்துள்ளனர்.

கேரள வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கேரளாவிற்கு எல்லா விதமான உதவிகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக செய்யும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறியதுடன், அதைத் தொடர்ந்து,  கேரளாவிற்கு முதற்கட்டமாக 5 கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழுவையும் அனுப்பி வைத்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கேரளாவுக்கு விரையும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தமிழக மீட்பு படையை சேர்ந்த 60 பேர் ஈடுபட்டுள்ளனர் தமிழகத்தில் இருந்து மேலும் 200 பேர் கொண்ட மீட்பு குழு கேரளா விரைவு அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவில் இருந்து அதிகாரிகள் உட்பட 260 பேர் வயநாடு விரைந்துள்ளனர் பெங்களூருவில் இருந்தும் கூடுதல் தேசிய மீட்பு படை வீரர்கள் வயநாடு விரைந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களில் 101 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளதாகவும்  சுல்தான் பத்தேரி பகுதியில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன; மீட்புப் பணிக்கு 20 படகுகள் தேவைப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே புயல் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலப்புரம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில்  பெய்த கனமழை  காரணமாக வயநாட்டில் உள்ள சூழல்மாலா உள்பட 3 இடங்களில்  கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.  மேலும் படுகாயங்களுடன் 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.  பல இடங்களில்  காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணியில், கேரளா தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் , உள்ளூர் இளைஞர்கள் உள்பட பல மாநிலங்களில் இருந்தும் மீட்பு படையினர் விரைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 260 பேரிடர் மீட்பு படையினர்  மீட்பு பணிக்காக கேரளா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரணுவமும் களமிறங்கி உள்ளது. மீட்பு பணியில் ஹெலிகாப்டர் உள்பட ராணுவ தளவாடங்களும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி மீட்கப்படும் மக்களுக்கு உடனே மருத்துவ வசதி வழங்கும் வகையில்   குழுவினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள், முதுலுதவி மருந்துகள் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் அநத் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து  வருவதால் மீட்டு பணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கனமழை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாது என்பதால்  மீட்பு பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. .

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில்,  நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (30-7-2024) கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன், இ.ஆ.ப., மற்றும் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடியினை வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

யநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச் சரிவு பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சுரேஷ்கோபி ஆகியோரை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் பாஜகவினரும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.