திருவனந்தபுரம்: குழந்தை திருமண தடைச் சட்டம் நாடு முழுவதும் உள்ள  அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என கேரள உயா்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், ‘இந்த நாட்டில் பிறந்த ஒருவா் முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதன்பிறகே, அவா் ஒரு மதத்தில் உறுப்பினா் ஆவாா். மதம் இரண்டாம் பட்சம். குடியுரிமைக்கே முதல் முன்னுரிமை என கூறியுள்ளது.

நமது நாட்டில்  மதத்திற்கு ஒரு சட்டம் என்ற நிலை பல்லாண்டு காலமாக தொடர்கிறது.  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூறும்போது, தனித்தனி சட்டங்களால், மக்களிடையே ஒற்றுமை சீர்குலைகிறது. மேலும் சில சட்டங்களால்  மற்ற மதத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவாக ஒரே சிவில் சட்டம் கொண்டுவர ஏற்கனவே உச்சநீதிமன்றம் மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளது. அதன்படி, யூனிபாஃர்ம் சிவில் கோடு கொண்டு வரவும் மத்தியஅரசு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டு  கொண்டு வரப்பட்ட குழந்தை திருமணத் தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம்,  எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் குழந்தை திருமணத் தடை சட்டம்2006 பொருந்தும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் பொருந்தும் என்று நீதிபதி பி வி குன்ஹிகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.

கேரள மாநிலம்  பாலக்காட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த குழந்தை திருமணத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முஸ்லிம் பெண் என்பதால் பருவமடைந்த பிறகு, அதாவது 15 வயதில் திருமணம் செய்து கொள்ளும் மத உரிமையைப் பெற்றிருப்பதாக பெண்ணின் தந்தை உள்பட மனுதாரா்கள் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தனா்.

இந்த மனு மீது நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் கடந்த 15-ஆம் தேதி பிறப்பித்த 37 பக்க உத்தரவில், ‘இந்த நாட்டில் பிறந்த ஒருவா் முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதன்பிறகே, அவா் ஒரு மதத்தில் உறுப்பினா் ஆவாா். மதம் இரண்டாம் பட்சம். குடியுரிமைக்கே முதல் முன்னுரிமை.

எனவே, குழந்தை திருமணத் தடைச் சட்டம்-2006 மத வேறுபாடின்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா், பாா்சி என அனைவருக்கும் பொருந்தும். மனுதாரா் எந்த மதத்தைச் சாா்ந்தவராக இருந்தாலும் சரி, எனது கருத்து இதுவாகவே இருக்கும். குழந்தை திருமணங்கள் அதில் தொடா்புடைய குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளான கல்வி, சுகாதாரத்தைப் பறிப்பதோடு தாய், சேய் இறப்பு, பாலியல் ரீதியிலான நோய்த்தொற்றுகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

மேலும், அக்குழந்தைகள் மனச்சோா்வு, பதற்றம் உள்ளிட்ட உளவியல் அதிா்ச்சிகளையும் சந்திக்க நேரிடும். இதுமட்டுமல்லாது குழந்தைத் திருமணத்தால் சிறுமிகள் குடும்ப வன்முறை சம்பவங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, குழந்தை திருமணத்தை நியாயப்படுத்த மனுதாரா்கள் முயற்சிப்பது மிகவும் வருத்தமான விஷயம்.

குழந்தைகள் படிக்கவும், பயணம் செய்யவும், அவா்களின் விருப்பப்படி வாழ்க்கையை அனுபவிக்கவும், அவா்கள் முதிா்ச்சி அடைந்ததும், அவா்களின் திருமணத்தை முடிவு செய்வதையும் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நவீன சமூகத்தில் திருமணத்தை கட்டாயப்படுத்த முடியாது.

குழந்தை திருமணங்களைத் தடுப்பதிலும் அது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என நீதிமன்றம் நம்புகிறது.

மனுவில் தொடா்புடைய குழந்தை திருமணத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்தவரே புகாா் அளித்துள்ளாா். எனவே, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் தங்கள் மதத்தைப் பொருள்படுத்தாமல் குழந்தை திருமணத்தின் தீமை பற்றி அறிந்திருக்கிறாா்கள் என்பதையும் இது காட்டுகிறது. எவ்வாறாயினும், பள்ளி பதிவேட்டில் குழந்தையின் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது எனும் மனுதாரா்களின் வாதத்தின் அடிப்படையில் தகுந்த நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தீா்ப்பளிக்கப்பட்டு உள்ளது.