வாஷிங்டன்

விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் ஆகஸ்ட் மாதம் பூமிக்கு திரும்புவார் என சரவதேச விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்று ஜூன் 7 ஆம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர்.

கடந்த 13 அன்று இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென பயணத் திட்டம் 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுஅந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

சுமார் 52 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளதால். அவர் எப்போது பூமிக்கு திரும்புவார் என்ற அனைவரிடம் இருந்து எதிர்பார்ப்பு எழுந்தது.  போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கோளாறு சரி செய்யப்பட்டு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு விரைவில் திரும்புவார், ஆனால் தேதியை கூற முடியாது என நாசா தெரிவித்தது.

நேற்று பிற்பகல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தோடு இயக்கப்பட்டு இருக்கும் போயிங் விண்கலத்தின் ப்ளைட் கன்ட்ரோலர் த்ரஸ்டர்கள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாகவும், விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சோதனையின் போது ஸ்டார்லைனர் கலிப்சோவிற்குள் அமர்ந்து தகவல்களை வழங்கியதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போயிங் விண்கலத்தில் ஹீலியம் கசிவு சரி செய்யப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆகஸ்ட் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவது குறித்து வெளியாகியுள்ள தகவல் அவர்களின் குடும்பத்தினரை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.