கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்ற வரும் மோதல்கள் விவகாரத்தில் நீதி மன்றங்கள் சடுகுடு ஆடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில், மேற்கு வங்க முதல்வர் உள்பட யாரும் ஆளுநரை விமர்சிக்கக் கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு மாநில முதல்வர் மத்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த செயல் கடுமையான விமர்சனங் களுக்கு உள்ளாகி வருகிறது.
ஏற்கனவே மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்று மத மோதல்கள், வன்முறை சம்பவங்களில் மாற்று கட்சியினரும், இந்து மதத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான புகார்களில் மாநில காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் பல வழக்குகளில், சாட்சிகள் மிரட்டப்பட்டு பல்டி அடிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான வழக்குகள் மற்றும் அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்துள்ள வழக்குகளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அதிகம் ஆர்வம் காட்டுவது இல்லை என்றும், அதே வேளையில் மம்மதாவுக்கு ஆதரவாக உத்தரவுகளை பிறப்பிக்க மட்டுமே உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஆர்வம் காட்டுகின்றன என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நீதிபதிகள், மேற்கு வங்க முதல்வரின் மிரட்டலுக்கு பணிந்து பணியாற்றி வருகின்றனர் என்று சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக, மம்தாவின் மிரட்டலை தொடர்ந்து, உத்தரவை ரத்து செய்துள்ளது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், பெண்கள் மூலம் ஆளுநரை களங்கப்படுத்தி பெண் முதல்வரான மம்தா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்ட செயல் என ஆளுநர் மாளிகை கூறியது.
இதை வைத்து அரசியல் செய்ய முயன்ற மாநில முதல்வர் மம்தாவும், ‘ ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்’ என்று கூறி, ஆளுநருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார். இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 17 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆளுநருக்கு எதிராக அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்கக் கூடாது என்று நீதிபதி கிருஷ்ண ராவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவானது அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை கடுமையாக விமர்சனம் செய்த மம்தா, இந்த உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐ.பி.முகர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்துச் சுதந்திரத்தை மதித்து சட்டத்திற்கு உட்பட்டு முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரை விமர்சிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் விமர்சிக்கக்கூடாது என்ற முந்தைய தீர்ப்பு செயலிழந்துள்ளது.
ஏற்கனவே நாட்டை உலுக்கிய சாரதா சிட்பண்ட் மோதலில் மம்தா கட்சியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபோல பள்ளி ஆசிரியர்கள் நியமன ஊழல் உள்பட பல்வேறு ஊழல் வழக்குகள் மேற்குவங்க மாநில அரசுமீது உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சந்தேஷ்காளி சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோல தேர்தல் நேரங்களில் மம்தா ஆதரவாளர்களால் நடத்தப்படும் அராஜகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வழக்குகளை மாநில காவல்துறை முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது இல்லை. அதுபோல மத்தியஅரசின் ஏஜென்சிகளான அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மம்தா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது