லண்டன்
பிரிட்டனில் ஒரு பெண் எம் பி பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுள்ளார்.
சமீபத்தில் பிரிட்டனில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்று தொழிலாளர் கட்சி தலைவர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இதுவரை இல்லாத வகையில் இம்முறை இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா ( வயது 29) வெற்றி பெற்றார். ஷிவானியை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் அகர்வால் தோல்வி அடைந்தார்.
1987 – ம் ஆண்டு முதல் லீ செஸ்டர் கிழக்கு தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. இதனை 37 ஆண்டுகளுக்கு பிறகு தகர்த்து ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபரான ஷிவானி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நடந்தபோது பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார்.
ஷிவானி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,
“நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருக்கிறது’
எனப் பதிவிட்டுள்ளார்.